தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரகுமானின் பங்கு அளப்பறியது. அவர் தனது இசையால் இந்திய ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். `மொசட் ஆஃப் மெட்ராஸ்’ என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருது பெற்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமை பெற்றவர். அவர் தற்போது, ரஜினியின் `2.0′, விஜய்யின் 61-வது படம் என பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
அதேபோல் `லேடி சூப்பர்ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழில் முன்னணி நாயகியாக வலம்வருகிறார். அவர் தற்போது `அறம்’, `வேலைக்காரன்’, `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’ மற்றும் பெயரிடப்படாத படம் என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான `டோரா’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மீஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் ‘அறம்’ படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா ‘அறம்’ படத்தில் கலெக்டராக நடிக்கிறார். இந்த படத்தின் டீசரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட உள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், நயன்தாரா நடித்துள்ள எந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தது இல்லை. `சிவாஜி’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு தோற்றத்தில் நயன்தாரா நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில், உலகின் முக்கியப் பிரச்சனையாக கருதப்படும் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசியுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் முக்கிய வேடங்களில் ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், ரமேஷ், வேல.ராமமூர்த்தி, ராமதாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.