பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு அவரது கைப்பை திருட்டு போனதாக செய்திகள் வெளியானது.
பாஸ்போர்ட் களவுப் போனது குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடனடியாக இந்திய தூதரகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, தூதரக அதிகாரிகளின் துரித முயற்சி மற்றும் நடவடிக்கைகளால் அவருக்கு உடனடியாக மாற்று பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.
இதற்காக இந்திய தூதரகத்துக்கு தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நன்றி தெரிவித்துள்ளார்.
‘எஸ்.பி.பி.-50’ என்ற பெயரில் அமெரிக்கா முழுவதும் எனது இசைப் பயணத்துக்கு வடிவம் தந்து, ஏற்பாடு செய்த எனது மகன் எஸ்.பி.பி. சரண், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், விளம்பரதாரருமான ராஜேஷ், உள்ளூர் ஸ்பான்சர்கள், எனது அன்புக்குரிய இசைக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் துணைப் பாடகியர்கள் சித்ரா, ஷைலஜா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
என்னுடைய பாஸ்போர்ட், கிரெடிட் கார்டுகள், ரொக்கப் பணம், ஐபேடுகள் மற்றும் பாடல்களுக்கான குறிப்புகள் வைக்கப்பட்டிருந்த எனது கைப்பை காணாமல் போனது. இதையடுத்து, 24 மணி நேரத்துக்குள் எனக்கு மாற்று (டூப்ளிகேட்) பாஸ்போர்ட் பெற்றுத்தந்த அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் பார்வதி, விஜயலட்சுமி ஆகியோருக்கு எனது நன்றி!.
இந்தியாவின் பெருமைக்குரிய இந்துஸ்தானி இசைப் பாடகி கிஷோரி அமோன்கர் காலமான செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு நல்ல இளைப்பாறுதலை தருமாறு சரஸ்வதி தேவியை பிரார்த்திக்கிறேன்.
ஆந்திர அரசின் பெருமைக்குரிய என்.டி.ராமாராவ் பெயரிலான விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக ஆந்திர மாநில அரசுக்கும், இவ்விருதுக்கான நடுவர்கள் குழுவுக்கும், குறிப்பாக நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
திரை இசை உலகில் எனது வழிகாட்டியான திருமதி. எஸ். ஜானகி அவர்கள் தனது இசைப் பயணத்தில் 60 ஆண்டுகளை இன்றுடன் (நேற்று) நிறைவு செய்துள்ளார். அவர் மேலும் மேலும் பாடுவதற்கான உடல் நலத்தை அருளுமாறு எல்லாம் வல்ல தெய்வத்தை வணங்குகிறேன்’ என தனது பதிவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.