தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, ஒருவகையான வைரஸ் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சிறில் டி சில்வா, அது டெங்குக் காய்ச்சல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
உடல் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கின்ற, விமல் வீரவன்சவுக்கு நுண்ணுயிர் எதிர்வினை மருந்துகள் வழங்கப்படுவதாகவும், இரத்தப் பரிசோதனை ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில், கடந்த 21ஆம் திகதியன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அவர், 26ஆம் திகதியன்று சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 29ஆம் திகதியன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், தேரர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க, 30 ஆம் திகதியன்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார்.
இந்நிலையில், வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைவாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 45ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்ட அவர், 43ஆம் இலக்க விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.