ஐ.நா தீர்மானத்தை அரசாங்கம் நடைமுறைபடுத்தாமல் இருக்க இயலாது : சீ.வி.விக்னேஸ்வரன்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைபடுத்தாமல் இருக்க இயலாது என சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் தலைமையிலான குழு தமக்கு சுட்டிக்காட்டியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் தலைமையிலான குழுவினர் இன்று (05) காலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவருடைய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கலந்துரையாடலின் நிறைவில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அரசாங்கம் சரியோ பிழையோ காலம் எடுத்ததோ , எடுக்கவில்லையோ சில குற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

சில விடையங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கின்றன என்றும், அதை நாங்கள் செய்வோம் என்று தங்கள் இணக்கப்பாட்டை இலங்கை அரசாங்கத்தினர் ஐக்கிய நாடுகளிற்கு அறிவித்திருக்கின்றார்கள்.

ஆனால் இதுவரை காலமும் என்ன செய்தனர் என்றால், முழுமையாக எதுவுமே செய்யவில்லை. ஆகவே இனியும் செய்ய வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கிறது.

ஆகவே அதிலிருந்து அவர்கள் விடுபட முடியாது என்பது தான் சர்வதேச மன்னிப்புச் சபையின் நிலைப்பாடாக இருக்கின்றது.

அவ்வாறு அரசாங்கம் அதிலிருந்த விடுபட்டுச் செல்லவும் இடமளிக்க மாட்டோம் என்பதும் சர்வதேச மன்னிப்புச் சபையினுடைய கருத்தாக இருக்கிறது.

அத்தகைய கருத்துக்கள் எண்ணங்கள் எங்களுக்கு நன்மையைத் தருவதாக இருக்கிறது.

ஏனெனில் ஏதோவொரு காரணத்திற்காக அரசாங்கமும் இணைந்து கொண்டு வந்திருக்கின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்தப் பிரேரனைக்கமைய உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கமும் கூறியிருக்கின்றது.

அவ்வாறு அரசாங்கம் கூறியிருப்பது போன்றே இனிச் செய்ய வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருப்பதால் அதனைச் செய்யுங்கள் என்றும் அதற்கு வேண்டிய அனுசரனைகளை வழங்குவது தான் தங்களுடைய கடமையென்றும் சரவ்தேச மன்னிப்புச் சபையினர் கூறியதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.