ஜனாதிபதிக்கு யாரை வேண்டுமானாலும் பிரதமராக்கும் உரிமையும், அதிகாரமும் உள்ளது அதனால் பிரதமரை அவர் மாற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு பிணை மறுப்பு தொடர்ந்து கொண்டு வருவதற்கு காரணம் எதுவென ஆராயப்பட வேண்டும்.
விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு போலவே பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் விமலுக்கு மட்டும் நீதி வேறு வகையில் செயற்படுகின்றது. இதில் நீதிமன்ற உத்தரவுகளை நான் ஒரு போதும் குறை சொல்லப் போவதில்லை என அரசியல் காரணங்களையே சுட்டிக் காட்டுகின்றேன்.
பிரதமரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் நடைபெறும் இந்த ஆட்சி நிலைக்கப் போவதில்லை. பிரதமர் ரணிலின் செயற்பாடுகள் நாட்டுக்கு ஏற்படும் பாரிய ஆபத்தாகவே நாம் பார்த்துக் கொண்டு வருகின்றோம்.
அதனால் பிரதமரின் பதவியானது மாற்றப்பட வேண்டும். ஜனாதிபதிக்கு இதனை செயற்படுத்த முழு அதிகாரமும் உள்ளது.
அப்படி பிரதமரை மாற்றிய பின்னர் எமது ஒத்துழைப்பு தொடர்பிலும் எடுக்கவேண்டிய தீர்மானங்கள் தொடர்பிலும் ஆலோசனை செய்கின்றோம் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.