புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தேகநபரின் பிள்ளைகள் குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களும் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்.
இதன் போது இந்த படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தேகநபர், தான் குற்றம் ஏதும் செய்யாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் முறைப்பாடு செய்தார்.
அத்துடன், குடும்ப வறுமை காரணமாக தனது மூன்று பிள்ளைகளும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கச்சான் விற்பனை செய்வதாகவும் நீதிமன்றில் தெரிவித்தார்.
இதனையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி, “கல்வி கற்கும் வயதில் சிறுவர்கள் கச்சான் விற்பனை செய்ய முடியாது. எனவே, இது குறித்து சிறுவர் நன்னடத்தை பிரிவினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர்கள் 12 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.