மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கில் வாதாடியே வழக்கறிஞர் ஆச்சாரியா பெருந்தொகை ஊதியமாக பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஆச்சாரியாவுக்குஊதியமாக மட்டும் ரூ. 1.06 கோடி அளவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம்.
ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கில் வாதாடி வந்தவர் பி.வி.ஆச்சார்யா. ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சிறைத் தண்டனை கிடைக்க முக்கியக் காரணமே இவரது வாதம்தான்.
ஜெயலலிதா – சசிகலா தரப்பு வாய்தா மேல் வாய்தா போட்டு அலைக்கழித்தபோதும் அசராமல் நின்று வாதிட்டவர் ஆச்சார்யா.
இவரது வாதத் திறமையின் காரணமாக கீழ் கோர்ட்டில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் தலையெழுத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த ஆர்டிஐ சேவகர் ஒருவர் சொத்துக் குவிப்பு வழக்கில் யாருக்கு எவ்வளவு சம்பளம் தரப்பட்டது என்பது குறித்து ஆர்டிஐ மூலமாக கர்நாடக அட்வகேட் ஜெனரல் அலுவலகத்தில் கேட்டிருந்தார்.
இதற்கு அட்வகேட் ஜெனரல் அலுவலகம் அளித்துள்ள பதிலில், கர்நாடக அரசு வழக்கறிஞராக வாதாடிய பி.வி. ஆச்சார்யாவுக்கு சம்பளமாக 1 கோடியே 6 லட்சத்து 86 ஆயிரத்து 18 ரூபாய் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கர்நாடக அரசு செய்த செலவாக 2 கோடியே 78 லட்சத்து 70 ஆயிரத்து 888 ரூபாய் என்றும் அட்வகேட் ஜெனரல் அலுவலகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.
இந்தத் தொகை அனைத்தையும் தமிழக அரசிடமிருந்து கர்நாடக அரசு வசூலிக்கவுள்ளது. காரணம், இந்த வழக்கை தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு உச்சநீதிமன்றம் மாற்றியபோது, ஆகும் செலவு அனைத்தையும் தமிழக அரசே தர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.