சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவையும் ஒரு குற்றவாளி என கூற முடியாது என்று நீதிபதிகள் அறிவித்துவிட்ட நிலையில், அவரது புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைத்துக்கொள்வதற்கு தடை கோர முடியாத நிலை உருவாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் சக குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில், கர்நாடக ஹைகோர்ட் அந்த தீர்ப்பை ரத்து செய்து நால்வரையும் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. ஜெயலலிதா மறைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானது. அதில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என கூறப்பட்டிருந்தது.
இதனால் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்ற நிலை உருவானது. ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவருக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது. எனவே, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 வருட சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பெங்களூர் நீதிமன்ற தீர்ப்புபடி, ஜெயலலிதா தரப்பிடமிருந்து அபராத தொகையான ரூ.100 கோடியை எப்படி வசூலிப்பது என்பது குறித்து கர்நாடக அரசு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஸ், அமித்தவராய் அமர்வு இன்று இதை தனது சேம்பரில் வைத்து விசாரித்தது. அப்போது ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரை குற்றவாளி என அறிவிக்க முடியாது என்று அறிவித்துவிட்டது.
இதன்மூலம், தார்மீக ரீதியாக ஜெயலலிதா வழக்கின் முதல் குற்றவாளி என்ற முத்திரை இருந்தாலும்கூட சட்டப்படி, அவர் குற்றவாளி இல்லை. எனவே அவரது உருவப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கலாம், பாரத ரத்னா உள்பட எந்த ஒரு உயரிய விருதையும் அவரது பெயரில் வழங்க தடை கிடையாது. அவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டவும் தடையில்லை.
ஜெயலலிதா இறந்தது இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ரிசர்வ் செய்யப்பட்ட காலத்தில்தான் என்பதால் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என்ற கர்நாடக தரப்பு வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை.