ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க புரட்சிதலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனுக்கு இதுவரை 4 சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக இரு அணிகளும், திமுக, தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி என பலமுனை போட்டி நிலவுகிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டு சந்திக்கும் தேர்தல் என்பதால் சசிகலா தரப்பு வேட்பாளர் தினகரனுக்கும், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மதுசூதனனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் கட்டாயம் வென்று பலத்தை நிரூபிக்க வேண்டிய இக்கட்டான சூழலில் இரு அணியினரும் உள்ளனர். இதனால் பணத்தை வாரி இறைத்து வருகிறார் தினகரன்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் டிடிவி.தினகரன் தொடர்ந்து வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தொண்டர்களுடன் தொப்பி அணிந்த படி நடந்து சென்றும், வாகனத்தில் சென்றும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதேபோல் மதுசூதனனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மக்கள் அலை, அலையாய் வந்து ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடார் கூட்டமைப்பு சார்பில் ஹெல்மெட் சின்னத்தில் போட்டியிடும் கணேசன் என்பவர் மதுசூதனனுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஓபிஎஸ் அணிக்கு இதுவரை 4 சுயேச்சை வேட்பாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே சுயேச்சை வேட்பாளர்கள் மஞ்சுளா ரவிக்குமார், ரேணுகா தேவி ஆகியோர் மதுசூதனனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.