சொத்து குவிப்பு வழக்கின் குற்றவாளி சசிகலா பெங்களூரு சிறை விதிகளை காலில் போட்டு மிதித்து துவம்சம் செய்து வருவது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அம்பலமாகியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டவர் சசிகலா. பெங்களூரு சிறையில் 4 ஆண்டு காலம் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். குற்றவாளி சசிகலா சிறைக்கு போனது முதலே தமக்கு ஏகத்துக்கும் சலுகைகள் வழங்க அனுமதி கோரினார்.
அட்டாச் பாத்ரூம், கட்டில், வீட்டு உணவு என சிறைக்குள் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க நினைத்தார் சசிகலா. ஆனால் சிறை நிர்வாகம் இவற்றுக்கு அனுமதி தரவில்லை.
அதேநேரத்தில் தம்மை அரசியல்வாதி என கூறிக் கொண்டு கட்சி தொண்டர்களை அனுமதிக்க வேண்டும் என அடம்பிடித்து வருகிறார் சசிகலா.
சிறைவிதிகளின்படி ஒரு மாதத்துக்கு 2 பார்வையாளர்கள்தான் சசிகலாவை சந்திக்க முடியும். சிறைவிதிகள் துவம்சம் ஆனால் இந்த சிறைவிதிகள் தற்போது சசிகலாவால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன என்பதை சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விவரங்களைப் பெற்று அம்லப்படுத்தியுள்ளார்.
சசிகலா 31 நாட்களில் 19 பார்வையாளர்களை சந்தித்திருக்கிறராம். நடராஜன் மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நடராஜன்தான் அதிக முறை குற்றவாளியான மனைவி சசிகலாவை அடிக்கடி சிறையில் சந்தித்துள்ளார். அதேபோல் வழக்கறிஞர்களும் சசிகலாவை அடிக்கடி சிறையில் சந்தித்து பேசியுள்ளனர்.
யார் யார்? இவர்கள் அல்லாமல் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, டிடிவி தினகரன், அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் வளர்மதி, கோகுல இந்திரா, சிஆர் சரஸ்வதி ஆகியோரும் சசிகலாவை சந்தித்துள்ளனர். அதேபோல் மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலா உறவினர்கள் என்ற போர்வையிலும் பலரும் சந்தித்துள்ளனராம்.
உரிய நடவடிக்கை தேவை இப்படி சிறைவிதிகளை துவம்சம் செய்து வரும் சசிகலாவுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கர்நாடகா காவல்துறை தலைவருக்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி. சிறைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் எனவும் நரசிம்மமூர்த்தி எச்சரித்துள்ளார். அடங்காத ஆட்டம்!