ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக தலைவர்கள் பலருக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்கள் அடிக்கடி கொலை பட்டியலை வெளியிட்டு வருகிறார்கள். அதில், இந்த தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அவர்கள் கொலை பட்டியலில் உள்ள தலைவர்களை கொல்வதற்கு தனி ஓநாய் தாக்குதல் என்று பெயரிட்டுள்ளனர்.
இதன்படி தனி ஆளாக சென்று தலைவர்களை துப்பாக்கியால் சுட்டோ அல்லது வேறு மாதிரியோ கொல்வது திட்டம் ஆகும்.
தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் புதிதாக ஒரு கொலை பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில், அமெரிக்க புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் உள்பட 8 ஆயிரத்து 786 பேர் பெயர் இடம்பெற்றுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். அமெரிக்க அரசியல் தலைவர்கள், ராணுவ தளபதிகள், உளவுத்துறை நிபுணர்கள் மற்றும் தீவிரவாதிகள் தாக்குதலை கண்டிக்கும் முஸ்லிம் தலைவர்கள் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த கொலை பட்டியலில் உள்ளவர்களின் முகவரி, இ-மெயில் முகவரி என அனைத்து விவரங்களும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதை அவர்கள் இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அத்துடன் ஒரு வீடியோவும் இணைக்கப்பட்டு இருக்கிறது. அதில் பேசியவர், உங்களுக்கு எதிராக எங்களுடைய போர் தொடரும். நீங்கள் எங்களுக்கு எதிராக நடத்தும் ஒவ்வொரு போரும் எங்களை மேலும் வலுவாக்கி வருகிறது.
எங்களுடைய எதிர்தாக்குதலை நீங்கள் மிக விரைவில் எதிர்கொள்வீர்கள் என்று கூறினார்.