சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் நேற்று ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.
இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் நூறு பேர் உயிரிழந்ததாக மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன.
குளோரின் விஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக ஐ.நா. சபை அமைப்பு தனது விசாரணையில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக இன்று கூடுகிறது.
முன்னதாக அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. சரைன் எனப்படும் மிக கொடூரமான ரசாயனத்தை வைத்து தயாரிக்கப்பட்ட விஷ வாயு குண்டுகள் இந்த தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டியது.
இந்நிலையில், சிரியாவின் நிலைமை இப்படி படுமோசமாக சீரழிந்ததற்கு முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியின் குளறுபடியே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிரியாவில் உள்ள குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த ரசாயன தாக்குதல் மிக கொடூரமான செயலாகும். இந்த கொடூரத்தை நாகரிகம் அடைந்த உலக நாடுகள் இதை கண்டும் காணாமல் இருந்து விட முடியாது.
ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கைக்கோடு போடப் போவதாக கடந்த 2012-ம் ஆண்டில் அப்போதைய அதிபர் ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், நமது நாட்டின் முந்தைய ஆட்சியின் பலவீனம் மற்றும் தீர்மானிக்கும் தன்மையில் உறுதிப்பாடற்ற நிலைப்பாடு ஆகியவற்றைதான் பஷர் அல் ஆசாத்தின் இந்த கொடூரமான செயல்பாடு சுட்டிக் காட்டுகிறது.
சகித்துக் கொள்ள முடியாத இந்த தாக்குதலை கண்டிப்பதில் உலகில் உள்ள நமது நேச நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து குரல் கொடுக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.