சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தியது கொடும் போர்க் குற்றமாகும்: ஐ.நா. பொதுச் செயலாளர்

சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் நேற்று ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.

இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் பரவலாக வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் 20 குழந்தைகள், பெண்கள் உள்பட 72 பேர் உயிரிழந்ததாக மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன.

குளோரின் வி‌ஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. சபை பிரதிநிதிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது.

ஷெய்க்குன் நகரில் போராளிகள் தங்கியிருந்த இடத்தின்மீது தங்கள் நாட்டு விமானப் படை சாதாரண ரக குண்டுகளையே வீசியதாகவும், குண்டு வீச்சின்போது போராளிகள் பதுக்கி வைத்திருந்த ரசாயன ஆயுதங்கள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், உள்நாட்டுப் போரினால் பெரும் பாதிப்புக்குள்ளான சிரியா நாட்டில் தங்களது வீடுகளையும், இருப்பிடங்களையும் விட்டு புலம்பெயர்ந்து உள்நாட்டிலேயே அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர்.

தற்போது அங்கு உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இவர்களுக்கான நிவாரணம் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைப்பது தொடர்பாக பெல்ஜியம் நாட்டு தலைநகரான புருசெல்ஸ் நகரில் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அந்தோனியோ கட்டெர்ஸ் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தின்போது உரையாற்றிய அந்தோணியோ கட்டெர்ஸ், ‘சிரியாவில் நேற்று நடைபெற்ற பயங்கரமான கொடூரமான சம்பவங்கள் அங்கு தொடர்ந்து போர்க் குற்றங்கள் நடைபெற்று வருவதையும், சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்படுவதையும் சுட்டிக் காட்டுகிறது.

தனது பொறுப்புக்கு ஏற்ப இத்தகைய குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்று குறிப்பிட்டார்.