டென்வர் நகரில் சாப்பிடும் போட்டியில் பங்கேற்றவர் பலி

அமெரிக்காவில் டாக்னட் என்ற உணவு பிரபலமானதாகும். ரொட்டியில் கிரீம்கள் கலந்து செய்யப்படும் இந்த உணவை விற்பதற்காக ஏராளமான பிரத்யேக கடைகள் உள்ளன. இந்த கடைகளில் விற்பனையை அதிகரிப்பதற்காக அடிக்கடி சாப்பாட்டு போட்டி நடத்துவது வழக்கம்.

இவ்வாறு டென்வர் நகரில் உள்ள ஒரு கடையில் சாப்பாட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் டிரேவிஸ்மலுப் (வயது 42) என்பவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு டாக்னட் உணவு வழங்கப்பட்டது. அதை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. அதை போட்டி போட்டு சாப்பிட்டனர்.

டிரேவிஸ்மலுப் சாப்பிட தொடங்கி 80 வினாடியில் அவருக்கு தொண்டையில் உணவு சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் உயிர் இழந்து விட்டார்.

இத்தனைக்கும் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு பெரிய பரிசுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. பரிசாக டாக்னட் உணவு மட்டுமே வழங்குவதாக அறிவித்து இருந்தனர். இந்த உணவுக்கு ஆசைப்பட்டு டிரேவிஸ்மலுப் உயிரை இழந்த பரிதாபம் நடந்துள்ளது.