எல்லையில்லா வரம் அருளும் எல்லைப்பிடாரி அம்மன்

சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் முக்கியமான ஒன்றாகும். சேலத்தில் தற்போதைய மையப்பகுதியாக விளங்கும் எல்லைப்பிடாரியம்மன் கோவில் பகுதி முன்பு குமாரசாமிப்பட்டி கிராமமாக இருந்தது.

கடந்த 85 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள ராமர் கோவில் திருவிழாவுக்கு குமாரசாமிப்பட்டி கிராமத்தில் இருந்து சிலர் மாட்டு வண்டியிலும், நடைபயணமாகவும் சென்று விட்டு திரும்பி வந்தனர். அப்போது அர்த்தநாரி கவுண்டர் தலைமையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் நடைபயணமாக ராமர் கோவிலுக்கு சென்று திரும்பினர். இரவு வேளை என்பதால் எங்கும் கும்மிருட்டாக இருந்தது.

அப்போது குமாரசாமிப்பட்டி ஊர் எல்லையான சுந்தர்லாட்ஜ் அருகில் வந்தபோது, சிலரது கண்ணில் நாகபாம்பு ஒன்று சீரிய சத்தத்துடன் குட்டையில் இருந்து வெளியேறி வழித்தடத்தில் குறுக்காக வந்தது. நாகபாம்பை கண்டதும் பயத்தில் அனைவரும் ஓடத்தொடங்கினர். அர்த்தநாரி கவுண்டர் ஓடி வந்தபோது, ஒரு கல் தடுக்கி கீழே விழுந்தார். என்னவென்று எழுந்து பார்க்கையில், ஒரு கற்சிலையானது மண்குழியில் இருந்து வெளியே தெரிந்த நிலையில் இருந்தது. அந்த கற்சிலை தடுக்கித்தான் அர்த்தநாரி கீழே விழுந்துள்ளார்.

அதேவேளையில் நாகபாம்பு பின்தொடர்கிறதா? என பார்த்தபோது அது மாயமாகி விட்டது தெரிந்தது. பயத்தில் ஓட்டம் எடுத்தவர்கள் ஒன்றுகூடி அர்த்தநாரி கவுண்டரிடம் வந்தனர். பின்னர் அந்த சிலையை அனைவரும் நிலா வெளிச்சத்தில் பார்த்துள்ளனர். அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் அனைவரும் வீட்டுக்கு செல்லாமல் ஊர் எல்லையில் நாகபாம்பை கண்டது குறித்தும், கற்சிலை குறித்தும் பேசியவாறு அர்த்தநாரி கவுண்டர் வீட்டு திண்ணையில் படுத்து உறங்கினர்.

அன்று இரவு அர்த்தநாரி கவுண்டர் கனவில் ஒரு பெண் தெய்வம் தோன்றி, ‘’தான் ஊர் எல்லைப்பகுதியில் ஒரு கற்சிலையாக மண் பகுதியில் புதைந்து இருப்பதாகவும், நாக சர்ப்பமாக அப்பகுதியில் காட்சியளித்து கொண்டு இருப்பதாகவும், நீங்கள் பொழுது விடிவதற்குள்ளாக ஊர்மக்களுடன் ஒன்றுகூடி ஊர் எல்லைப்பகுதிக்கு சென்று கற்சிலையினை எடுத்து வந்து பாதுகாத்து என்னை வழிபட்டால் ஊரில் உள்ள மக்களையும், ஊரினையும் செல்வ செழிப்புடன் எல்லையில் இருந்து காப்பேன்” எனக்கூறி விட்டு மறைந்தது. விழித்தெழுந்த அர்த்தநாரி, அதை ஊர்மக்களிடம் தெரிவித்து கற்சிலையை மீட்டு எல்லையை காக்கும் தெய்வமாக வணங்கி வந்ததால், அம்மனுக்கு “எல்லைப்பிடாரி அம்மன்” என்று அன்றிலிருந்து பெயர் வழங்கப்பட்டு வருகிறது.

1941-ம் ஆண்டு எல்லைப் பிடாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் விரதம் இருந்து அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. எல்லைப்பிடாரி அம்மனுக்கு இணையாக கோவில் உள்பிரகாரத்தில் புதிதாக உள்ள அம்மன் அலங்கார சிலை ஒன்று மகாபலிபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

எல்லைப்பிடாரியம்மன் ஊர் எல்லையில் இருந்து கண்டெடுக்கபட்டதால், அம்மன் திருவிழா தொடங்கும் முன்பு சுந்தர்லாட்ஜ் இருந்த இடத்தில் இருந்துதான் சக்தி பூஜைகள் செய்து சக்தி அழைத்து திருவிழா தொடங்குகிறது. இதுதான் கோவில் வரலாறு. எல்லையில்லா வரம் அருளும் எல்லை பிடாரி அம்மனை வழிபட்டால் தீவினைகள் அகலும், நோய்நொடி தீரும். வேண்டிய வரம் தருவாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தற்போது எல்லைப்பிடாரி அம்மன் கோவில் விழா நடந்து வருவதால் சேலம் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாகவும், குடும்பத்துடனும் வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.