கோலாகலமாக தொடங்கியது ஐ.பி.எல். 10-வது சீசன் தொடக்க விழா: எமிஜாக்சன் உற்சாக நடனம்

இந்தியன் பிரிமீயர் ‘லீக்’ என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியதன் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது.

இந்நிலையில், 10-வது இந்தியன் பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட் போட்டி ஐதராபாத் நகரில் கோலாகலமாக தொடங்கியது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின், சேவாக், கங்குலி, லட்சுமணன் ஆகிய 4 பேரும் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

நடப்பு சாம்பியன் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கோப்பையுடன் மைதானத்தில் வலம் வந்தார். நடிகை எமிஜாக்சன உற்சாகமாக நடனமாடினார். அப்போது, புலியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.

இதனையடுத்து இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

இன்று தொடங்கும் ஐ.பி.எல். போட்டி மே மாதம் 21-ந்தேதி வரை 41 நாட்கள் நடக்கிறது. 8 அணிகள் விளையாடும் இந்தப்போட்டியில் ஒவ்வொரு  அணியும் லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடும். ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.