‘உழவன், உள்ளத்தை அள்ளித்தா’ உள்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை ரம்பா என்ற விஜயலட்சுமி (வயது 39). இவருக்கும், இலங்கை தமிழரான இந்திரகுமாருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். திருமணத்துக்கு பின்னர், ரம்பா, கணவருடன் கனடா நாட்டில் வாழ்ந்தார். அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த ஆண்டு கணவரை பிரிந்து குழந்தைகளுடன், ரம்பா சென்னை திரும்பினார். பின்னர், தன்னுடன் சேர்ந்து வாழ கணவர் இந்திரகுமாருக்கு உத்தரவிடக்கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் ரம்பா வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில், சென்னை வந்த இந்திரகுமார், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ‘என்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக குடும்பநல கோர்ட்டில் ரம்பா வழக்கு தொடர்ந்தாலும், இதுதொடர்பான சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுக்கிறார். மேலும், என் மகள்களை பார்க்க கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி சென்னை வந்தேன். ஆனால், இதுவரை மகள்களை பார்க்க முடியவில்லை. என்னுடைய இரு மகள்களும் கனடா நாட்டில் பிறந்ததால், அவர்கள் அந்நாட்டின் குடிமக்கள். அதனால், மகள்களை என்னிடம் ஒப்படைக்கும்படி ரம்பாவுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர், ‘இது குடும்ப பிரச்சினை என்பதால், ரம்பாவும், இந்திரகுமாரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும். இருவருக்கும், சமரச பேச்சுவார்த்தை நடத்தும் நபராக மூத்த வக்கீல் ஜவாத் என்பவரை நியமிக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை ரம்பாவும், அவரது கணவர் இந்திரகுமாரும் நேரில் ஆஜரானார்கள்.
அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொண்டதாகவும், இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறினார்கள். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.