விநாயகப்பெருமான் முன்னிலையில் குட்டுப் போடுவது ஏன்?

முன்னோர்கள் முற்காலத்தில் சொல்லி வைத்தவைகள் எல்லாம் முத்தான கருத்துகள் தான் என்று சொல்ல வேண்டும். அவற்றை ஏற்று நடந்தால் ஆரோக்கியமும் சீராகும். அன்றாட வாழ்க்கையும் நன்றாக அமையும்.

பொதுவாக அதிகாலையில் எழுந்ததும் விநாயகப்பெருமான் முன்னிலையில் குட்டுப் போடுவது வழக்கம். ஆனால் அது எதற்காக என்ற காரணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். காதுகளில் அருகில் சுமார் 200 நரம்புகள் உள்ளன. இந்த நரம்பு களுக்கு ரத்தம் பம்ப் செய்யப்பட்டு புது ரத்தம் உருவாகி ஞாபக சக்தியை வளர்க்கின்றன. எனவே குழந்தைகளுக்கு மறதி ஏற்படாமல் இருக்க தோப்புக்கரணம் போடுவது நல்லது. அதைத்தான் ‘குட்டுப்பட்டாலும் மோதகக் கையான்பால் குட்டுப் போட வேண்டும்’ என்று சொல்லி வைத்துள்ளனர்.

ஒவ்வொருவரும் அதிகாலையில் எழும் பொழுது, வலதுபக்கம் திரும்பி படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டும். வலம் என்றால் வெற்றி என்று பொருள். அன்றைய நாளில் செய்யும் அத்தனை காரியங்களும் வெற்றி பெறுவதற்கு வலது பக்கமாக திரும்பி எழ வேண்டும்.

அடுத்ததாக எழுந்தவுடன் முதலில் உச்சரிக்கும் வார்த்தை நேர்மறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும். தெய்வப் பெயர்களை உச்சரிக்கலாம்.

விடியும் நேரம் செட்டிநாட்டுப் பகுதியில் ‘பொழுதிப்ப விடியும், பூவிப்ப மலரும், சிவனிப்ப வருவார், பலனிப்பத் தருவார்’ என்று சிறு குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பது வழக்கம்.

முதலில் உள்ளங்கையைப் பார்த்த பிறகு பூமியைத் தொட்டு வணங்க வேண்டும். பொறுமையைப் போற்ற வேண்டும். அதன்பிறகு காலைக் கடன்களைத் தொடர்ந்தால், ஒவ்வொரு நாளும் உற்சாகமாகச் செயல்பட இயலும் என்பதில் சந்தேகமில்லை.