சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தில் பயிலும் மாணவர்கள் சிலர் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.
இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் தலைவர் என்ற வகையில் தமது பிரச்சினையை உணர்வுபூர்வமாக அணுகுவார் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் நாமல் ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.
நாமல் ராஜபக்சவை சந்தித்த மாணவர்கள், சைட்டம் நிறுவனத்தின் வரலாறு, தற்போது தமக்கு இருக்கும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தெளிவுப்படுத்தியுள்ளதுடன் இறுதியில் தமது பிரச்சினையில் தலையிட்டு தீர்க்குமாறு கோரியுள்ளனர்.
எனினும் மாணவர்கள் எதிர்பார்க்காத பதில் ஒன்றை நாமல் ராஜபக்ச வழங்கியதாக கூறப்படுகிறது.
“தம்பி பைத்தியமா… நாங்கள் சைட்டம் நிறுவனத்தை பயன்படுத்தியே ஆட்சியை கவிழ்க்க போகிறோம்’ என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். பதிலை கேட்ட மாணவர்கள் திகைத்து போனதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர், “நாடாளுமன்ற உறுப்பினரே அப்படியானால், நெவில் பெர்னாண்டோ தேர்தலுக்கு வழங்கிய 50 மில்லியன் ரூபா குறித்து என்ன கூறுகிறீர்கள்.
உங்கள் தந்தை தானே தனது கைகளில் சைட்டம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் அதனை மறந்து விட்டீர்களா” எனக் கேட்டுள்ளார்.
இந்த கேள்வியால் குழப்படைந்த நாமல் ராஜபக்ச, “ அவற்றினால் தற்போது பயனில்லை. அந்த காலத்தில் அப்படிதான், தற்போது இப்படிதான்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான். இதனால், சைட்டம் எதிர்ப்பை கைவிடப் போவதில்லை” என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.