பிரதான கட்சிகளின் நீண்டகால ஆட்சி ஜனநாயகத்தை பாதிக்கும்: எஸ்.பி. திஸாநாயக்க

நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நீண்டகாலம் ஆட்சி செய்வது நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இரண்டு பிரதான கட்சிகள் நீண்டகாலம் ஆட்சி செய்தால், நாட்டு மக்கள் மாற்றத்தை தேட ஆரம்பிப்பார்கள்.

அந்த மாற்றமானது சில நேரம் ஆயுதம் தாங்கிய அமைப்பாக இருக்கலாம் அல்லது அடிப்படைவாதம், இனவாதம், ஜாதிவாத குழுக்கள் தலைத்தூக்க காரணமாக அமையலாம்.

நடை பேரணியாக வந்து ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடப் போவதாக கூட்டு எதிர்க்கட்சி கூறுவது கேலிக்குரியது.

அப்படியான நடை பேரணிக்கு 12 ஆயிரம் பேரை திரட்டுவது கூட மிகவும் கடினமானது. எது எப்படி இருந்த போதிலும் கூட்டு எதிர்க்கட்சியுடன் ஒரு நட்புறவான மோதலே காணப்படுகிறது.

அவர்களில் 90 வீதமானவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இருக்கின்றனர். கிராமத்து வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கே இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நம்புகின்றனர்.

அது கடந்த தேர்தலில் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் தற்போது அந்த வாக்குகள் சிதறி வருகின்றன எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.