எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு பிணை வழங்கப்பட உள்ளது.
விமல் வீரவன்சவிற்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களையும் துரித கதியில் நீதிமன்றில் முன்வைக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தின் சட்டத்தரப்புக்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
விமல் வீரவன்சவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிணை வழங்குவதற்கு எதிர்ப்பை வெளியிட வேண்டாம் என பிரதமர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவிற்கு பிணை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன பல தடவைகள் பிரதமரிடம் கோரியுள்ளார்.
விமல் வீரவன்சவை சிறையில் அடைத்து வைத்திருக்க அரசாங்கத்திற்கு எவ்வித அவசியமும் கிடையாது என பிரதமர், தினேஸ் குணவர்தனவிடம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக விமல் வீரவன்சவிற்கு பிணை வழங்கப்படக்கூடிய வகையிலான பின்னணியை உருவாக்குமாறு பிரதமர், அரசாங்க சட்டத்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் விமல் வீரவன்ச மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.