ஓபிஎஸ் அணி சவப்பெட்டி பரப்புரைக்கு கடும் எதிர்ப்பு: தினகரன் கோஷ்டி மறியல்!

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் சவப்பெட்டி மாதிரியை வைத்து வாக்கு சேகரித்த ஓபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தினகரன் கோஷ்டியினர் ஆர்.கே.நகரில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.கே.நகருக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதால் எந்த தேர்தலில் இல்லாத அளவுக்கு பறக்கும் படைகள்கண்காணிப்பு என ஆர்.கே.நகரே அமர்க்களப்பட்டு வருகிறது.

எனினும் பணம் வினியோகத்தை கட்டுப்படுத்த முடியாததால் நாட்டிலேயே முதல்முறையாக மைக்ரோ அப்சர்வர்ஸை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் சவப் பெட்டியின் மாதிரியை காண்பித்து ஓபிஎஸ் அணியினர் பிரசாரம் செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து ஓபிஎஸ் அணியினர் சவப்பெட்டி பிரசாரத்தை கைவிட்டனர். இதனிடையே சவப்பெட்டியை வைத்து அரசியல் நடத்தும் ஓபிஎஸ் மற்றம் பாண்டியராஜன் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி தினகரன் தரப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்.கே.நகரில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு ஏராளமான போலீஸார் குவிக்க்கப்பட்டனர். மேல்லும் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீண் நாயரை கண்டித்தும் தினகரன் கோஷ்டியினர் மறியலில் ஈடுபட்டு கோஷமிட்டனர்.