தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை அரசு முன்னெடுத்து வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் சபையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டாண்டுகள் கடந்துள்ள,போதிலும் தமிழரின் முக்கிய பிரச்சினைகளுக்கு அரசு இன்னும் தீர்வை வழங்கவில்லை என்றும், மஹிந்தவைக் காரணம் காட்டியே தமிழரை இன்று நடுவீதிக்கு அரசு கொண்டுவந்துவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. கடும் வெய்யிலுக்கு மத்தியிலும் ஏ – 9 வீதிக்கு அருகில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் அணிதிரண்டு போராடி வருகின்றார்கள்.
40 நாட்கள் கடந்துள்ள போதிலும் இதற்கு அரசு உரிய பதிலை வழங்கவில்லை.
தெற்கிலுள்ள பெண்கள் இப்படி வீதியில் கிடந்தால் நீங்கள் (அரசு) சும்மா இருப்பீர்களா? வடக்கு, கிழக்கில் போராடுபவர்கள் தமிழர்கள் என்பதால்தான் அலட்சியப்போக்கில் செயற்படுகின்றீர்கள்.
இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கையளிக்கப்பட்டு – சரணடைந்து காணாமல்போயுள்ளவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதையே அறிய முற்படுகின்றோம்.
போர் முடிந்து 8 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதற்குரிய தீர்வு – பதில் இன்னும் வழங்கப்படவில்லை.
காணாமல்போனவர்களின் தாய்மார் கண்ணீர் வடித்தபடியே தமது உறவுகளைத் தேடித் திரிகின்றனர்.
அவர்களுக்கு உரிய பதில் சொல்லவேண்டும். கண்ணீருடன் விளையாடக்கூடாது.
குறிப்பாக நல்லிணக்கம், சமாதானம் பிறக்க வேண்டுமானால் எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். ஆனால், ஆட்சி மாறி இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் எதுவும் நடக்கவில்லை.
மஹிந்தவைக் காரணம் காட்டியே தமிழ் மக்கள் நடுவீதியில் விடப்பட்டுள்ளனர்.
இதனால், மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துகின்றனர். அத்தகைய போராட்டங்கள் எமக்கு எதிராகவும் நடத்தப்படுகின்றது.
ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்டதுபோல் தமிழர்களின் ஜனநாயகக் கட்டமைப்பையும் அழிப்பதற்குரிய முயற்சி எடுக்கப்படுவதுபோல் தெரிவிக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை, அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லை என மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து கூட்டமைப்பை
அந்நியப்படுத்துவதுபோல்தான் அரசின் அணுகுமுறைகள் இருக்கின்றன.
தேர்தல் அரசியல், கட்சி அரசியல் நடத்தாலும் மக்களுக்காக அரசியல் நடத்தப்படும் நிலை ஏற்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.