விமலை விடுவித்தது யார்?

பிரதமரிடம் பிச்சையெடுத்து விடுதலையாக வேண்டிய நிலையில் நான் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

இன்று பிணை கிடைக்கப்பெற்ற விமல், நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே எனக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. எவருடைய பரிந்துரையின் பேரில் விடுதலை பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

பிரதமரிடமோ அல்லது ஜனாதிபதியிடமோ பிச்சை எடுத்து கையேந்தி பிணை வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை.

அதேபோன்று நீதிமன்றங்கள் சுயாதீனத் தன்மையுடன் செயற்படுவதாகவே நாம் நினைக்கின்றோம். ஆனாலும் பிரதமர் நீதிமன்றத்திற்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கூறியதாக செய்திகள் வெளிவந்தன.

அப்படியானால் நீதிமன்றத்திற்கு உத்தரவு கொடுக்க பிரதமரால் முடிகின்றதா? இப்போது பிரமரிடம் சென்று கேளுங்கள் நாட்டின் நீதி சுயாதீனத்துடன் செயற்படுகின்றதா என.

அப்படி என்றால் நீதி முறையாக செயற்படுகின்றது, என்ற எமது எண்ணக்கரு பிழையாக மாறிவிடும் இதற்கு பிரதமரே பதில் கூற வேண்டும்.

முக்கியமான விடயம் என்னை காரணம் இன்றி சிறையில் அடைத்து வைத்து மேலும் என்னை சீண்டியதற்கு பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் நன்றிகள். முன்னரை விட இப்போது புது வேகத்துடன் போராட ஆர்வம் கொடுத்துவிட்டார்கள்.

மேலும் மகளை பார்க்க வைத்தியசாலை செல்கின்றேன். அவரின் உடல்நிலையை கவனிக்க வேண்டும் எனவும் விமல் தெரிவித்தார்.