புளோரிடா விடுதியில் சீன அதிபருக்கு டிரம்ப் விருந்து!!

சீன அதிபர் ஜின்பிங், அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார்.

புளோரிடா மாகாணத்தில் உள்ள அதிபர் டிரம்புக்கு சொந்தமான மார் எ லாகோ விடுதிக்கு சென்ற அவரையும், அவரது மனைவி பெங் லியுவானையும் அதிபர் டிரம்பும், அவரது மனைவி மெலானியாவும் வரவேற்றனர்.

டிரம்ப் தம்பதியர், ஜின்பிங் தம்பதியருக்கு இரவு விருந்து அளித்து கவுரவித்தனர்.

அப்போது பேசிய டிரம்ப், “நாங்கள் ஏற்கனவே நீண்ட ஆலோசனை நடத்தினோம். இதில் நான் எதையும் பெற்று விடவில்லை. ஆனால் நாங்கள் நல்ல நட்புறவை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். நான் அதைப் பார்க்கிறேன். காலப்போக்கில் நாங்கள் அபாரமான நட்புறவை அடையப்போகிறோம். அதற்கு நான் ஆவலாக இருக்கிறேன்” என கூறினார்.

தனது 2 நாள் பேச்சுவார்த்தையின்போது, ஜின்பிங், டிரம்புடன் இரு தரப்பு உறவினை வலுப்படுத்தும் அம்சங்கள், சிரியா விவகாரம் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.

சீனா வருமாறு டிரம்புக்கு ஜின்பிங் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.