சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் புரட்சிப் படையினரின் பதுங்குமிடத்தின்மீது அந்நாட்டின் விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர்.
சர்வதேச மனித உரிமைகளை மீறிய வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள பல முக்கிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐக்கியநாடுகள் சபை போன்றவை மிக காரசாரமான கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.
இதற்கிடையில், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிரியா நாட்டு விமானப்படை தளத்தின்மீது நேற்று அமெரிக்கா பயங்கரமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. சிரியாவின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறலை கண்டிக்கும் வகையில் இந்த அதிரடி தாக்குதலை நடத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷைராத் விமானப்படை தளத்தின்மீது அமெரிக்க போர் விமானங்கள் 59 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் விமானப்படைத்தளம், போர் விமானங்கள் மற்றும் அங்கிருந்த பெட்ரோல் பங்க் உள்ளிட்டவை தீக்கிரையான. அங்கிருந்த ஏராளமான வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த அசுரத்தனமான தாக்குதலுக்கு சிரியா அதிபருக்கு ஆதரவுக்கரம் நீட்டிவரும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்லோவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின்மீது அமெரிக்கா நடத்தியுள்ள ஏவுகணை வீச்சால் அமெரிக்கா-ரஷியா இடையிலான நல்லுறவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று புதின் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
சிரியா அரசிடம் ரசாயன ஆயுதங்கள் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ள புதின், சிரியா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் அங்கு அரசுப்படைகள் ரசாயன தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா புணைக்கதைகளை கூறி குற்றம்சாட்டி வருவதாகவும் டிமிட்ரி பெஸ்கோவ் சுட்டிக் காட்டியுள்ளார்.