ஒருவரையொருவர் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனநிலை வேண்டும்!

இயேசு பிரான் இவ்வுலகில் போதித்துக் கொண்டிருந்த காலத்தில், ‘பேதுரு’ என்ற சீடர் அவரை நெருங்கினார்.

அவரிடம், “ஆண்டவரே! என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்தால், நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு பிரான், “ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழு முறை” என்று கூறினார்.

இச்செய்தியை வைத்து விண்ணரசை பின்வரும் ஒரு நிகழ்வுக்கு ஒப்பிடலாம் என்று கூறினார். இதோ! அந்த நிகழ்வு.

அரசர் ஒருவர் தன்னுடைய பணியாளர்களிடம், கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபோது, அவரிடம் ‘பத்தாயிரம் தாலந்து’ கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவனோ பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும், அவன் மனைவி மக்களோடு, அவனுக்குரிய உடைமைகள் அனைத்தையும் விற்று விட்டுப் பணத்தை அடைக்க உத்தரவிட்டார்.

இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அந்தப் பணியாள், அவர் காலில் விழுந்து பணிந்து, “என்னைப் பொறுத்தருளுங்கள். எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்” என்று கூறினான். அந்தப் பணியாளரின் தலைவர் அவன் மேல் இரக்கம் கொண்டு அவனை விடுவித்தார். அதுமட்டுமல்லாமல் அவனது கடன் முழுமையையும் தள்ளுபடி செய்தார்.

அந்தப் பணியாள் வெளியே சென்றான். அப்போது அவனிடம் கடன்பட்டிருந்த இன்னொரு பணியாளரைக் கண்டான். அவன் ‘நூறு தெனாரியம்’ அவனிடம் கடன் பட்டிருந்தான். “நீ பட்ட கடனை உடனே எனக்குத் திருப்பிக் கொடு” என்று கூறி அவனுடைய கழுத்தையும் நெரித்தான்.

உடனே அந்தப் பணியாளன், அவனது காலில் விழுந்தான். “என்னைப் பொறுத்துக் கொள்; நான் திருப்பித் தந்து விடுகிறேன்” என்று கெஞ்சினான். அதற்கு அவன் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக கடனைத் திருப்பித் தரும் வரை சக பணியாளனைச் சிறையில் அடைத்தான்.

அவனுடன் வேலை செய்யும் பணியாளர்கள் இது குறித்து தலைவரிடம் சென்று முறையிட்டனர். இதனால் தலைவர் அந்தப் பணியாளனை வரவழைத்து, “பொல்லாத போக்கிரியே! நீ என்னை வேண்டிக் கொண்டதால் உன் கடன் முழுவதையும் நான் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டி யதுபோல, நீயும் உன்னுடன் வேலை பார்க்கும் பணியாளரிடம் இரக்கம் காட்டி இருக்க வேண்டும். நீ அதைச் செய்யவில்லை” என்று சினத்துடன் கூறிய அத்தலைவர், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும் வரை அவனைப் பிடித்து ‘வதை’ செய்பவர்களிடம் ஒப்படைத்தார்.

பிறகு மக்களை நோக்கி, “உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்” என்றார்.

இயேசு பிரான் கூறிய இந்தச் சம்பவத்தை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பாருங்கள்.

‘மத்தேயு’ என்ற நற்செய்தியாளர் கூறிய இந்நற்செய்தியை எண்ணினால் ஓர் உண்மை புலனாகும். தன் கடன் மட்டும் மன்னிக்கப்பட வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் தவறானது.

இறைவன் நமக்கு மன்னிப்பு அளிக்கத் தயாராக இருக் கிறார். இந்தநிலையில் நாம் பிறரை மன்னிக்கத் தயாராக இருக்கிறோமா? என்ற கேள்வியை நாம் நமக்குள்ளே கேட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த உவமையை மீண்டும் ஒருமுறை படித்து விட்டு, நம் சிந்தனையை மேலும் ஒரு படி உயர்த்துவோம். உயர்த்தி நம்மை நாமே சீர்படுத்துவோம்.

ஒருவரை எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, அவர் கூறும் பதிலை யோசிப்போம். “எழுபது தடவை ஏழுமுறை” என்று கூறுகிறார். அப்படியென்றால் அதன் பொருள் என்ன? கணக்கில் அடங்காத முறை என்று பொருள் கொள்ள வேண்டும். தவறு செய்பவர்களை மன்னிக்கப் பழகி விட்டால் நம்முடைய குற்றங்களை இறைவன் மன்னிப்பார்.

நற்செய்திகளில் இத்தகைய கருத்துகள் பல இடங்களில் பரவிக் கிடக்கின்றன.

இதோ ஒரு செய்தி- “நீ உன் காணிக்கையை இறைவனுக்குச் செலுத்த வருகின்ற பொழுது, உன் சகோதரனோடு நீ மனத்தாங்கலாய் இருந்தால், நீ உன் காணிக்கையை பீடத்தில் வைத்து விட்டு, முதலில் உன் சகோதரனோடு உறவாடி விட்டு வந்து உன் காணிக்கையைச் செலுத்து என்கிறார். அப்படி செய்கின்றபொழுதுதான், உன் காணிக்கையை இறைவன் ஏற்கிறார்” என்று கூறுகிறார்.

உலகில் மனிதராகப் பிறந்தவர்கள், சகோதர மனப்பான்மையோடும், ஒற்றுமையோடும் கூடி வாழ வேண்டும் என்ற கருத்தைத்தான் இயேசு பிரான் முன்மொழிகிறார்.

ஒற்றுமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், ஒருவரையொருவர் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனநிலை வேண்டும்.

கடன் முழுவதையும் விடுவித்த தலைவரைப்போல, இறைவன் இருக்கிறபொழுது, பிறர் கடனை மன்னிக்க நாம் ஏன் தயாராக இல்லை.

இயேசு பிரான் நமக்கும் இவ்வுலகிற்கும் போதித்த இவ்வுண்மைகளை ஒருகணம் எண்ணிப் பார்ப்போம். நம்மை மாற்றிக் கொள்வோம். குற்றம் நீங்கி வாழ முற்படுவோம். நற்செய்தியின் உண்மையை உணர்வோம்.