10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று புனேவில் நடந்த 2-வது ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்டியா 15 பந்தில் 35 ரன் எடுத்தார். அசோக் தின்டா வீசிய கடைசி ஓவரில் பாண்டியா 4 சிக்சர் அடித்து அசத்தினார்.
185 ரன் இலக்கை நோக்கி விளையாடிய புனே அணியில் ரகானே- கேப்டன் ஸ்டீவன் சுமித் ஜோடி சிறப்பாக விளையாடியது. ரகானே 60 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின் ஸ்டீவன் சுமித் அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவரில் புனேவுக்கு 13 ரன் தேவைப்பட்டது. பொல்லார்ட் வீசிய அந்த ஓவரில் ஸ்டீவன் சுமித் 4, 5-வது பந்தில் சிக்சர்கள் அடித்து வெற்றி பெற வைத்தார். அவர் 54 பந்தில் 84 ரன் எடுத்து (7 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
வெற்றியுடன் புனே அணி கணக்கை தொடங்கி உள்ளது. வெற்றி குறித்து ஸ்டீவன் சுமித் கூறியதாவது:-
“இங்கு (புனே) பேட்டிங் செய்ய அருமையான இடமாக இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக கடைசி வரை களத்தில் நின்றேன். கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அல்லது பொல்லார்ட்தான் வீசினார் என்பதை அறிந்து இருந்தோம். எனவே அவரை குறிவைத்து ஆடினோம். நெருக்கடியில் சிக்சர்கள் அடித்து வெற்றி பெற்றது அற்புதமானது.
இம்ரான் தாகீர் சிறப்பாக பந்து வீசினார். அவரை முன்கூட்டியே பந்து வீச விரும்புகிறேன். மிடில் ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்கு உதவியாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் பவுன்ஸ் மற்றும் மெதுவான பந்துவீச்சு இருந்தாலும் 180 ரன் இலக்கை எடுக்க கூடியது தான்” என்றார்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா கூறுகையில், ஸ்டீவன் சுமித் பேட்டிங் உண்மையில் அருமையாக இருந்தது. எங்களது பீல்டிங் நன்றாக இல்லை. இந்த ஆட்டத்தில் இருந்து நிறைய கற்று கொண்டுள்ளோம்” என்றார்.