இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், ஆஸ்திரேலியாவின் சில வீரர்கள் எப்போதும் சிறந்த நண்பர்களாக இருக்கமாட்டார்கள் என்று கூறினார்.
டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்த பின்னர் தற்போது ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு அணியின் கேப்டன் கோலியும், ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னரும் தொடக்க விழாவின்போது பேசிக்கொண்டனர்.
அதுகுறித்து வார்னர் கூறுகையில் விராட் கோலியும் நானும் இன்னும் நண்பர்கள்தான் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து வார்னர் கூறுகையில் ‘‘ஐ.பி.எல். தொடக்க விழாவின்போது நானும் விராட் கோலியும் பேசிக்கொண்டோம். தற்போது வரை நாங்கள் நண்பர்கள்தான். நான் அவருடன் சில வார்த்தைகள் பேசிய உரையாடல் மிகவும் சிறப்பாக அமைந்தது.
எங்களுக்கு உள்ள கிரிக்கெட் பணிகளை சரியாக செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். பத்திரிகையாளர்கள் சரியோ அல்லது தவறோ, செய்திகளை எழுதுவார்கள். நாங்கள் வீரர்கள். போட்டி எப்படி என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், ஆடுகளத்திற்கு வெளியே நாங்கள் தற்போது வரை சிறந்த நண்பர்கள்தான்’’ என்றார்.