ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு புனேயில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த மும்பை 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 38 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 35 ரன்களும் எடுத்தனர். புனே வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா கடைசி ஓவரில் மட்டும் 4 சிக்சர் உள்பட 30 ரன்களை வாரி இறைத்தார். அவர் 4 ஓவர்களில் 57 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
ஐ.பி.எல். போட்டியில் திண்டா ஒரு இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் வழங்குவது இது 4-வது முறையாகும். வேறு எந்த பவுலரும் இந்த அளவுக்கு மோசமாக பந்து வீசியதில்லை.
அடுத்து களம் இறங்கிய புனே அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 60 ரன்கள் (34 பந்து) விளாசினார். அதன் பிறகு கேப்டன் ஸ்டீவன் சுமித் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி 3 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது, பொல்லார்ட்டின் ஓவரில் ஸ்டீவன் சுமித் தொடர்ந்து இரு சிக்சர் பறக்க விட்டு வெற்றியைத் தேடித்தந்தார். புனே அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுமித் 84 ரன்களுடனும் (54 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக கேப்டன் பதவி இல்லாமல் களம் இறங்கிய விக்கெட் கீப்பர் டோனி 12 ரன்னுடனும் (12 பந்து) களத்தில் இருந்தனர். மும்பைக்கு எதிராக ஒரு அணி துரத்திப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச இலக்கு இதுவாகும். சொந்த ஊரில் புனே அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். கடந்த ஆண்டு சொந்த மண்ணில் (புனே) 4 ஆட்டங்களிலும் புனே அணி தோற்று இருந்தது.
வெற்றிக்கு பிறகு புனே அணி வீரரும், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனுமான ரஹானே நிருபர்களிடம் கூறுகையில், ‘ஸ்டீவன் சுமித் ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். ஆனால் என்னை பொறுத்தவரை டோனியே இப்போதும் உலகின் தலைசிறந்த கேப்டன்’ என்றார்.
டோனி மற்றும் ஸ்டீவன் சுமித் ஆகியோரின் கேப்டன்ஷிப் குறித்து அவரிடம் கேட்ட போது, ‘இப்போது அது பற்றி சொல்வது மிகவும் கடினம். ஏனெனில் ஸ்டீவன் சுமித்தின் தலைமையில் நான் ஆடிய முதல் ஆட்டம் இது தான். அதே சமயம் டோனியின் தலைமையில் நிறைய ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். டோனி, உலகத்தரம் வாய்ந்த கேப்டன் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். டோனி, சுமித் ஆகியோரின் கேப்டன்ஷிப்பை மக்கள் ஒப்பிட்டு பேசக்கூடாது. இருவரும் முற்றிலும் தனித்தன்மை கொண்டவர்கள்.
டோனியிடம் இருந்து பல விஷயங்களை ஸ்டீவன் சுமித் கற்றுவருகிறார். இந்த ஆட்டத்தில் டோனியிடம் அவர் ஆலோசனை கேட்டு பெற்றதை பார்க்க முடிந்தது. எனவே அடுத்து வரும் ஆட்டங்களிலும் அவர் இதே போன்று டோனியிடம் ஆலோசனைகளை பெற விரும்புவார்’ என்றார்.