திரிஷா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கர்ஜனை’. இதில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சனி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். சுந்தர் பாலு என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். செஞ்சுரி இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுகூனம் சார்பில் ஜோன்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பில் திரிஷா இருந்ததாக கூறி, இப்படத்தின் படப்பிடிப்புக்கு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, ஜல்லிக்கட்டு விஷயம் சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் கதை குறித்து இயக்குனர் சுந்தர் பாலு மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஐந்து நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது அதை படமாக்கி சமூக வலைத்தளங்களில் பேரம் பேசி விற்று வருகிறார்கள். இந்நிலையில், காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள்.
இதன் பின்னணியில் நடக்கும் கதையை ஆக்ஷன் திரில்லருடன் கலந்து படமாக்கி இருக்கிறேன். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் திரிஷா தயங்காமல் டூப் இல்லாமல் நடித்துள்ளார். இப்படத்தின் கதையே கேட்டவுடனே நடிக்க திரிஷா சம்மதித்தார்.
காரைக்குடி, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு இசையமைத்த அம்ரிஷ் இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.