குழந்தைகளின் வளர்ச்சியில் கார்ட்டூன் ஏற்படுத்தும் விளைவுகள்!

கார்ட்டூன், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில், தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. குழந்தைகளை, உணவு சாப்பிட வைப்பதற்காகவும், தங்களின் வேலைகளில் தொந்தரவின்றி ஈடுபடவும், கார்ட்டூன் திரைகளின் முன், குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர் அதிகளவில் உள்ளனர். நீங்கள், அப்படிப்பட்ட பெற்றோரில் ஒருவராக இருந்தால், குழந்தைகளின் வளர்ச்சியில், கார்ட்டூன்கள் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைப் பற்றியும், சிந்திக்க வேண்டிய நேரம் இது.

கார்ட்டூன் பார்ப்பது, குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பெரிதாக பாதிக்கிறது. கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாவது, குழந்தைகளின் கற்பனைத் திறனை பாதிப்பதாக, பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புறவெளியில் விளையாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை, அவர்கள் உணர்வதில்லை. புறவெளியில் விளையாடுவது, அவர்களுக்கு இயற்கையை தெரிந்து கொள்ள உதவுகிறது; கூடவே, துடிப்போடு இருக்கவும் வைக்கிறது.

பெரும்பாலான கார்ட்டூன்கள், சரியான சொல்லகராதியை உபயோகிப்பதில்லை. இதனால், தவறான மொழி ஆளுமையை பின்பற்ற வைக்கிறது. குழந்தைகள் சாதாரணமாக பேசுவதை விட்டுவிட்டு, தங்களுக்கு விருப்பமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல் பேச முயற்சிக்கின்றன. இது, கார்ட்டூன்களால் குழந்தைகள் பாதிப்படையும் காரணிகளில் ஒன்று.

கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள், திரைக்கு முன் அமர்ந்து சாப்பிடவே முற்படுவர். இதுவே, குழந்தைகளின் தவறான மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைக்கு மூலக் காரணம். குழந்தைப் பருவத்தில் ஒருவர் பழகும் உணவு முறையே, இறுதி வரை நிலைத்திருக்கும். கார்ட்டூன்கள் முன், அதிக நேரம் செலவழிப்பது, குழந்தைகளுக்கு தனிமை மனப்பான்மைக்கும், அலட்சிய மனப்பான்மைக்கும் வித்திடும். இதனால், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, அவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. இது, அவர்களின் சமூக நடத்தையையும் பாதிக்கிறது.