தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாட இலங்கை மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் கொழும்பில் பல பாகங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தை இலக்கு வைத்து கொள்ளைக்கார கும்பல் ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
புதுவருடத்தின் போது கொழும்பிற்கு வரும் பயணிகளின் பணம், தங்க நகைகள் போன்றவற்றை கொள்ளையடிப்பதற்காக சிலாபம், புத்தளம் பகுதியில் இருந்து 20 இளைஞர்கள் அடங்கிய குழுவொன்று வருகைத்தந்துள்ளதாகவும், அவர்களிடம் பாதுகாப்பாக இருக்குமாறும் பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் சேரிப்புறங்களில் வாழும் இளைஞர்கள் குழுவொன்றே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பில் வாழும் வசதியான பெண்கள் மற்றும் ஆடை நிறுவனங்களின் சேவை செய்யும் பெண்கள், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடத்தில் அதிக கொள்ளையிடும் நடவடிக்கைகளில் ஈடுப்படுவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சில இளம் பெண்கள் சிறிய குழந்தைகளை தூக்கிக் கொண்டு பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆண்களை ஏமாற்றும் சில பெண்கள் அவர்களை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பெறுமதியான பொருட்களை கொள்ளையடிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த குழு தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவு உட்பட கொழும்பில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் கடுமையான அவதானத்தை செலுத்தியுள்ளது.
இந்தநிலையில், பொலிஸ் கான்ஸ்டபில் மற்றும் அரசாங்க ஊழியர் ஒருவரின் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் இந்த குழுவை சேர்ந்த இருவர் பொரளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.