பாரம்பரிய விவசாயத்துறையிலிருந்து விலகி கையடக்கத் தொலைபேசியினூடாகவும், இணையத்தினூடாகவும் சந்தை தொடர்புகளை ஏற்படுத்தி ஏற்றுமதி சந்தையுடன் இணைந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு தற்போதைய இளைஞர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.
அதற்கான கடன் வசதிகளையும், வழிகாட்டல்களையும் வழங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் காணப்படுகின்றன என்றும் தெரிவித்த ஜனாதிபதி இந் நாட்டின் விவசாயத்துறையை பலப்படுத்தி புதியதோர் பாதையில் செல்வதற்கான சூழல் தற்போதைய இளம் தலைமுறையினருக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.
உணவு உற்பத்திக்கான தேசிய செயற்திட்டத்துடன் இணைந்ததாக விவசாய இயக்கங்களுக்கு இலவசமாக விவசாய உபகரணங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு இன்று (08) பிற்பகல் அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாய சமூகத்தை கடன் சுமையிலிருந்து மீட்டு அவர்களது பொருளாதாரத்தை பலப்படுத்தி நாட்டின் விவசாயத்துறையை கட்டியெழுப்புவதற்கு அவர்கள் நவீன தொழில்னுட்பங்களுடன் இணைந்து செயற்படவேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அதற்கான செயற்திட்டங்களை அரசாங்கம் தற்போது ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.