ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த அதிமுக(அம்மா) அணியின் வேட்பாளர் டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலமாக ரூ89 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கின. வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையில் இந்த ஆவணங்கள் சிக்கின.
இது தொடர்பான விரிவான அறிக்கையுடன் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆவணத்தின் அடிப்படையில் ஆர்கே நகர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படலாம் அல்லது டிடிவி தினகரன் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.