நாங்கள் என்ன தரம் தாழ்ந்தவர்களா?… பாடை ஊர்வல போராட்டத்தில் அய்யாகண்ணு உருக்கம்!

டெல்லியில் விவசாயிகள் பாடை கட்டி, ஒப்பாரி வைக்கும் போராட்டத்தை தொடங்கினர். அப்போது தங்கள் தரம் தாழ்ந்ந்த மக்களாக பார்க்காதீர்கள் என்று அய்யாகண்ணு வேண்டுகோள் விடுத்தார்.

வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொளுத்தும் வெயிலில் 400-க்கும் அதிகமான விவசாயிகள் கட்டாந்தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காததால் கடந்த வாரம் எலிக்கறி, பாம்பு கறி உண்ணும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அண்டைய மாநில விவசாயிகளின் மனம் பதை பதைத்தது. எனினும் மத்திய அரசு மனமிறங்கவில்லை.

பின்னர் வறட்சி நிவாரணம் பாதி வழங்கப்பட்டதை கண்டித்து அரை மொட்டை போராட்டமும், அரை மீசை எடுக்கும் போராட்டத்தையும் முன்னெடுத்து சென்றனர். எனினும் பலன் தரவில்லை.

இந்நிலையில் நேற்று 26-ஆவது நாளாக போராடிய விவசாயிகளில் 23 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும் பிளேடால் கையை அறுத்தும் கொண்டும் போராடினர்.

இன்று அவர்களின் போராட்டம் 27-ஆவது நாளை எட்டியது. இதனால் மத்திய அரசின் கவனம் செலுத்தாமையால் விவசாயிகள் உயிரை மாய்த்து கொள்கின்றனர் என்பதை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த பாடை கட்டி ஊர்வலமும், ஒப்பாரி போராட்டமும் நடத்தினர்.

அந்த போராட்டத்தில் கலந்து கொண்டதென்னிந்திய நதி நீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவிக்கையில், விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. எங்களது போராட்டத்தை உயிருடன் இருக்கும் போது தான் மத்திய அரசு கேட்கவில்லை.

உயிரைவிட்டால்தான் கேட்கும் என்பதை வெளி்படுத்தும் விதமாக இந்த பாடை கட்டி ஊர்வலம் செல்லும் போராட்டத்தை நடத்துகிறோம். எங்களை தீண்டதகாதவர்களாகவும், தரம் தாழ்ந்தவர்களாகவும் பார்க்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.