அக்கா தமிழிசையே சொல்லிட்டாங்க.. தினகரன் தகுதி நீக்கம் உறுதியாகிறது!

தமிழகத்தில் அடுத்து என்ன நடக்கும்… மத்திய அரசு என்ன நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதை முன்கூட்டியே தொடர்ந்து ஆரூடம் போல கூறி வருகிறார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன்.

தற்போது அதிமுக (அம்மா) அணி வேட்பாளர் டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியிருப்பதால் இன்று அல்லது நாளை தேர்தல் ஆணையத்திடமும் இருந்து இதேபோல் ஒரு அறிவிப்பு வெளியாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் அதிமுக, திமுகவை பலவீனப்படுத்துவதில் மத்திய பாஜக அரசு முனைப்புடன் உள்ளது. இதில் தற்போது அதிமுகவை இரண்டு கட்சிகளாக பிளவுபட வைத்துள்ளது பாஜக. அத்துடன் அதிமுகவின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காது என முதலில் கூறியவர் தமிழிசை சவுந்தராஜன்தான். அதேபோல் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. தமிழிசையின் கருத்துகளை முன்வைத்து தினகரன் கோஷ்டி கடுமையாக விமர்சனம் செய்து வந்தது.

ஆர்கே நகர் தேர்தல் தற்போது ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

தகுதி நீக்கம் இந்த நிலையில் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழிசை சவுந்தராஜன் வலியுறுத்தி வருகிறார்.

டெல்லியில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் தமிழிசையின் இந்த கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு தமிழிசை கூறுவதைப் போல அனேகமாக டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்! தமிழக பாஜகவினர் நினைப்பது அத்தனையும் கனஜோராக அல்லவா நடக்கிறது!