எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி வெளியாகவுள்ள ‘பாகுபலி-2’ படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக, படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், ராஜமௌலி பேசும்போது, ‘பாகுபலி’ படம் பெரிய ஹிட்டாகவேண்டும் என்று நினைத்துதான் படத்தை எடுத்தோம். ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை. இப்படத்தை ஒரு மொழி சார்ந்த படமாக கொடுக்கவேண்டும் என்று நினைத்து படத்தை எடுக்கவில்லை. எல்லோருக்குமான படமாக இருக்கவேண்டும் என்று நினைத்துதான் படத்தை எடுத்தோம். படம் வெளிவந்த பிறகு இது இன்னொரு படத்தின் சாயல் மாதிரி இருக்கிறது என்று யாரும் சொல்லாதது பெரிய சந்தோஷம்.
‘பாகுபலி’ படத்தின் கதை பெரியதாக இருந்ததால் இரண்டு பாகமாகத்தான் இதை கொடுக்குமுடியும் என்று தீர்மானித்துதான் இரண்டு பாகமாக எடுத்தோம். இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளிவருமா? என்றால், அது நிச்சயமாக வராது. இருந்தாலும், ‘பாகுபலி’ கதையை ஒட்டி நிறைய கதைகள் இருக்கிறது. அதை சீரியலாகவோ, நாவலாகவோ அல்லது வேறு வகையில்தான் சொல்ல முடிவு செய்துள்ளோம். இதை தவிர்த்து படமாக எடுக்கும் முடிவு இல்லை.
மீண்டும் இதேபோல் ஒரு பிரம்மாண்ட படம் பண்ணமுடியுமா? என்று எனக்கு தெரியவில்லை. இந்த மாதிரி 5 வருடம் ஒரு படத்தை எடுக்கவேண்டுமானால் இந்த படத்திற்கு அமைந்ததுபோல் என்மேல் முட்டாள்தனமாக நம்பிக்கை வைத்த நடிகர்களும், கலைஞர்களும் கிடைக்கவேண்டும். அதுபோல் மறுபடியும் எனக்கு கிடைக்குமா? என்று தெரியவில்லை. எனவே, எனது அடுத்த படத்தை கிராபிக்ஸ் இல்லாமல் ஒரு சாதாரண படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன்.
‘பாகுபலி’ முதல் பாகத்தில் எல்லோரையும் நான் அறிமுகப்படுத்தியிருந்தேன். இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குண்டான கதையை சொல்லியிருக்கிறோம். முதல் பாகத்தில் உள்ள பிரம்மாண்டம், இரண்டாம் பாகத்திலும் இருக்கும்படி செய்திருக்கிறோம். முதல் பாகத்திற்கு கொடுத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கும் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.