எகிப்து தேவாலயத்தில் குண்டுவெடிப்பு: பலி எண்ணி்க்கை 44-ஆக அதிகரிப்பு

எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ளது டான்டா நகரம். அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தின் முக்கிய பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தல், குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது, தேவாலயத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில், பிரார்த்தனை செய்துகொண்டிருந்த பலர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோர தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 42 பேர் காயமடைந்ததாகவும் அரசு ஊடகத்தில் செய்தி வெளியான நிலையில் சமீபத்தில் வெளியான தகவல்களில் பலி எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது என்றும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமுற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாலயத்தில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படையினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து இது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.