எகிப்து இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ஐ.எஸ்!

எகிப்தில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

எகிப்தின் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

கெய்ரோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Tanta பகுதியில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 26 பேர் கொல்லப்பட்டதுடன் எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து சில மணி நேரங்களுக்கு பின்னர் அலெக்சாண்டிரியா பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் முன்னர் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 35 பேர் படுகாயமடைந்தனர்.

வெடிகுண்டு தாக்குதல் நடந்தபோது குறித்த தேவாலயத்தின் உள்ளே Coptic Pope Tawadros II வழிபாட்டில் இருந்ததாகவும், ஆனால் அவர் பத்திரமாக இருப்பதாகவும் எகிப்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எகிப்தின் காப்டிக் கிறிஸ்துவர் சமூகம் குருத்து ஞாயிறை கொண்டாடி வந்த வேளையில் இந்த வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி எதிர்வரும் வாரத்தில் Pope Francis எகிப்து விஜயம் செய்ய உள்ள நிலையில் தேவாலயம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் கெய்ரோவில் அமைந்துள்ள மிக பெரிய காப்டிக் தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதுடன் 49 பேர் படுகாயமடைந்தனர். இதில் பெரும்பாலும் பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டனர்.

கடந்த சில ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது நடத்தப்படும் கொடிய தாக்குதல்களில் ஒன்றாக அந்த தாக்குதல் கருதப்பட்டது.

எகிப்திய கிறிஸ்தவர்களில் 10 சதவிகிதம் பேர் காப்டிக் சமூகத்தினர். இவர்கள் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.