விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நெருப்புடா’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் உள்ள சிவாஜியின் ‘அன்னை இல்லத்தில்’ நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டு படத்தின் ஆடியோவை வெளியிட்டார். இந்த விழாவில் நடிகர் ரஜினி பேசும்போது,
அன்னை இல்லம் எனக்கு ரொம்பவும் நெருக்கமானது. நான் இந்த இல்லத்திற்கு இரண்டு முறை வந்திருக்கிறேன். ஒருமுறை சிவாஜி, அன்னை இல்லத்திற்கு என்னை சாப்பிட அழைத்திருந்தார். என்னை மட்டும்தான் வரச்சொல்லியிருக்கிறார் என்று நினைத்து நானும் வந்தேன். எனக்கு முன்பே, 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு அங்கு தடபுடலாக விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதேபோல், அன்னை இல்லத்தில் அன்று பரிமாறப்பட்ட உணவுகளும் எக்கச்சக்கமாக இருந்தது. அதை என்னால் மறக்கமுடியாது.
என்னுடைய நடிப்பில் வெளியான இரண்டு படங்களைத்தான் சிவாஜி அவர்கள் திரையரங்கில் பார்த்துள்ளார். ஒன்று அண்ணாமலை, மற்றொன்று படையப்பா. படையப்பா படத்தில் அவர் நடித்திருந்தார் என்பதற்காக வந்து பார்த்தார். அண்ணாமலை படத்தில் இரண்டாம் பாதியில் நான் நடித்திருந்த கதாபாத்திரத்தை சிவாஜியை மனதில் வைத்துதான் நடித்தேன். அதை பார்த்துவிட்டு சிவாஜி என்னை ரொம்பவும் பாராட்டினார். சிவாஜி அவர்கள் உயிரோடு இருந்தவரை அவருக்கு போட்டியாக யாரும் இருந்ததில்லை.
தாத்தா, அப்பாவின் பெயரை காப்பாற்றவேண்டும் என்ற சுமை விக்ரம் பிரபுவுக்கு இருக்கிறது. விஷால் பேசும்போது ஒரு படத்தின் விமர்சனத்தை மூன்று நாட்கள் கழித்து வெளியிட்டால், தயாரிப்பாளர்களுக்கும், அந்த படத்துக்கும் நல்ல விடிவுகாலம் பிறக்கும் என்று பேசியிருந்தார். அது வரவேற்கத்தக்கது. அதேபோல், விமர்சனம் பண்ணும்போதும் யாரையும் காயப்படுத்தாதீர்கள்.
தயாரிப்பாளர்களும் சினிமாவில் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதை மனதில் படத்தை எடுக்க முன்வர வேண்டும். தான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்து படம் எடுக்கக்கூடாது. அதேபோல், முன்அனுபவம் வாய்ந்த விநியோகஸ்தர்களின் ஆலோசனைகளை பெற்று படங்களை விற்பனை செய்யுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் நடிகர் விவேக், விஷால், தனுஷ், ராகவா லாரன்ஸ், கார்த்தி, விஜய்யின் மனைவி சங்கீதா, நிக்கி கல்ராணி, இயக்குனர் விக்ரமன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.