உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் தோப்புக்கரணம் போடுவோம்

நமது முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு பல்வேறு நன்மைகளை செய்து கொடுத்து இருக்கிறார்கள். முன்னோர்களின் செயல்பாடுகள், உணவு முறை பழக்க வழக்கம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அர்த்தம் உடையதாக இருந்தது. அவற்றில் மிக முக்கியமானது தோப்புக்கரணம். அந்த காலத்தில் சிறியவர்கள் தவறு செய்து விட்டால் உடனே கட்டையை எடுத்து அடிக்க மாட்டார்கள்.

தவறை திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில் என்ன தண்டனை கொடுப்பார்கள் தெரியுமா? வலது கையை வைத்து இடது காதையும் இடது கையை வைத்து வலது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்திருக்க செய்யும் தோப்புக்கரணத்தை தான் தண்டனையாக தருவார்கள். நான் போதும் என்று சொல்லும் வரை தோப்புக்கரணத்தை நிறுத்தக்கூடாது என்பார்கள்.

வீட்டில் மட்டுமல்ல பள்ளிகளிலும் நமது ஆசிரியர் பெருமக்கள் தோப்புக்கரணத்தை தான் மாணவர்களுக்கு தண்டனையாக தருவார்கள். இன்றைய பல பேருக்கு இந்த தோப்புக்கரணத்தை பள்ளியிலோ அல்லது வீட்டிலோ போட்ட ஞாபகம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இளைய தலைமுறையினர் பலர் தோப்புக்கரணம் தண்டனையை அனுபவித்து இருக்கமாட்டார்கள். விநாயகர் கோவில்களில் சாமி கும்பிடுபவர்கள் விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு வணங்குவது உண்டு.

தோப்புக்கரணம் போடுவதால் உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. தோப்புக்கரணம் போடுவதால் குண்டலினி சக்தி கிடைக்கிறது. இதனால் உடல் சுறுசுறுப்பு அடைகிறது.

இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொருவரும் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி உள்ளனர். எனவே ஒவ்வொருவரும் தினமும் காலையிலும் மாலையிலும் தோப்புக்கரணம் போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் உடலிலும் உள்ளத்திலும் நல்ல மாற்றம் ஏற்படுவது தெரிய வரும். நாம் தொடங்கிய இந்த தோப்புக்கரணம் பழக்கத்தை இன்று அடியோடு மறந்து விட்டோம்.

ஆனால் வெளிநாடுகளில் சூப்பர் பிரெய்ன் யோகா என்ற பெயரில் தோப்புக்கரணம் அழைக்கப்படுகிறது.உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்ல மாற்றத்தை தரும் இந்த தோப்புக்கரணத்தை வெளிநாட்டு டாக்டர்கள் மருத்துவ சிகிச்சையாகவும் பயன்படுத்துகிறார்கள்.

எனவே நாம் ஒவ்வொருவரும் தினமும் காலையில் பத்து முறையாவது தோப்புக்கரணம்போடுவோம். மாணவ, மாணவிகள் கட்டாயம் தோப்புக்கரணம் போட்டால் அவர்களது மூளை சுறுசுறுப்பாகி படிப்பது மனதில் நன்கு பதியும். கல்வியில் கொடி கட்டி பறக்கலாம். மனதில் புதிய சிந்தனையும் பிறக்கும். எனவே இன்றே தோப்புக்கரணத்தை போட தயாராவோம்.