புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் ஒருவாரத்திற்கு பத்து அத்தியாவசிய பொருட்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“லங்கா சதோச நிறுவனங்களில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தை விடவும் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடைந்து காணப்படுகின்றதானது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.
கடந்த ஆட்சிக்காலத்தை விடவும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தற்போது குறைவாகவே விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையிலேயே விலைகள் அதிகரித்து காணப்படுவதாக அரசாங்கத்தின் மீது வீண்புரளிகளை சிலர் ஏற்படுத்தி வருகின்றனர்.
எதிர்வரும் காலத்தில் குறித்த அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைந்த விலையிலேயே வைத்திருப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். இது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் என்னுடன் ஆலோசிக்கவுள்ளனர்” என அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.