சமகால அரசாங்கத்தை இரண்டு போயா தினங்களில் வீட்டிற்கு அனுப்புவதற்கு ஒன்றினைய வேண்டும் தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
30 வருட யுத்தத்தில் காணப்படாத மோசமான நிலைக்கு நாட்டை கொண்டு வந்துள்ள அரசாங்கம், மக்களின் புதுவருட சந்தோஷத்தை இல்லாமல் செய்துள்ளது.
இந்த அரசாங்கத்தை இரண்டு போய தினங்களில் அல்ல ஒரு போய தினத்தில் வீட்டிற்கு அனுப்புவதற்கு ஒன்றினைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று விஜிதசிறி தேரரை சந்திக்க சென்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“மூன்று மாதங்கள் சிறையில் இருந்த நான் அரசியல் வேட்டைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தேன். உண்ணாவிரதம் 8 நாட்கள் பூர்த்தியடைந்ததும், தேரர்கள் எனது உண்ணாவிரதததை நிறுத்திக் கொள்ளுமாறு கூறினார்கள். அந்த கோரிக்கைக்கமைய அந்த உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன். தங்களின் கோரிக்கைக்கமைய உண்ணாரவிரதத்தை முடித்துக் கொண்டதற்கான காரணத்தை கூறிச் செல்வதற்கே இன்று கண்டிக்கு வருகை தந்துள்ளேன்.
நாட்டை நல்ல வழியில் கொண்டு செல்வதற்காக எங்களை சிறையில் அடைக்கவில்லை. நாங்கள் சிறை செல்வதனால் மக்களின் வாழ்வாதாரம் செழிக்கும் என்றால் நாங்கள் சிறையில் இருப்பதற்கும் தயார். எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாதென்றால், புதிய அரசியலமைப்பை கொண்டுவந்து இந்த நாட்டை பிளவுப்படுத்தவில்லை என்றால், நாங்கள் சிறையில் இருப்பதற்கு தயார். எனினும் இன்று நாட்டை நேசிக்கும் தலைவர்கள் மற்றும் இராணுவத்தினரை கொண்டு சிறைச்சாலைகளை நிரப்பும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றது. இன்று வெற்றியை இல்லாமல் செய்யும் திசை நோக்கி நாட்டை கொண்டு செல்லும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சிறைச்சாலைகளில் இருந்தாலும், வெளியே இருந்தாலும், நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்வோம்.
நான் சிறையில் இருந்த மூன்று மாத காலப்பகுதியில் மக்கள் தனித்தனியாக எனக்காக நேர்த்திகடன்களை நிறைவேற்றினார்கள். எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். பல்வேறு செயற்பாடுகளில் ஈடுப்பட்டார்கள். எங்கள் சிறை வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாற்றமடைவதற்கு அந்த நடவடிக்கைகள் எங்களுக்கு உதவியது. அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் நேரமாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வீரவன்ச, 87நாட்களாக வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.