டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் சேர்ந்து மண்சோறு சாப்பிட்டார் பிரேமலதா!!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, நேற்று பிரதமர் அலுவலகம் முன்பு நிர்வாணப் போராட்டம் நடத்தினர். ‘பிரதமர் மோடி தங்களை நேரில் சந்திக்க வேண்டும்’ என்ற கோரிக்கையையும் தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றனர்.

இன்று 29-வது நாளாக அவர்களின் போராட்டம் தொடர்கிறது. இந்த நிலையில், அவர்கள் மண் சோறு சாப்பிடும் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தை நடத்தியபோது, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரமேலதா, விவசாயிகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்டு மண்சோறு சாப்பிட்டார்.

அப்போது, செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பிரமேலதா, ‘தமிழக விவசாயிகள் தங்கள் உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில், தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயம் சார்ந்த பூமிதான் நம் நாடு. விவசாயிகள் இல்லாமல் நாம் இல்லை. விவசாயிகள், அவர்களால் முடிந்த எல்லா வகையிலும் போராடிவருகின்றனர். நேற்று நடந்த முழு நிர்வாணப் போராட்டத்தால் தலைகுனிவு ஏற்பட்டது அவர்களுக்கு இல்லை. தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும்தான் தலைகுனிவு’ என்று தெரிவித்தார்.