திண்டுக்கல் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில் நிலக்கோட்டை இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் கடந்த 1912-ம் ஆண்டுக்கு முன்பு மாரியம்மன் கோவில் பீடமாக இருந்தது. பின்னர் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அன்று முதல் நிலக்கோட்டை இந்து நாடார் உறவின் முறை காரியதரிசிகள் கோவிலை நிர்வாகம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு கோவிலின் முன்புறம் புதிதாக 5 நிலைகளில் 50 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை கோவிலில் பங்குனி மாத திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெறும்.
மேலும் இந்த கோவில் வளாகத்தில் முதல் கடவுளாக விநாயகரும், துர்க்கையம்மன், சுப்பிரமண்யசுவாமி, தட்சிணாமூர்த்தி, அருணாச்சலேஸ்வரர், ஆஞ்சநேயர், பைரவர் மற்றும் ஒரே இடத்தில் ரெங்கநாதர், மகாலட்சுமி, கருடாழ்வார் உள்ளிட்ட சுவாமி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் உள்ள நந்தி பகவான் காதில் பக்தர்கள் தங்களுடைய நேர்த்தி்க்கடனை சொல்லி வழிபட்டு வருவது கோவிலின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
கோவிலில் பைரவரை அஷ்டமி திதியில் வணங்கி வந்தால் அனைத்து தொல்லைகள், பீடைகள் நீங்கும். அதே போன்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்மனை மனம் உருகி வேண்டினால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இவ்வாறு குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதியினர் ஆண்டுதோறும் கரும்பு தொட்டில்களுடன் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது தவிர தங்கள் குறைகள் தீர்த்து வைக்கக்கோரி அம்மனிடம் மனம் உருகி வேண்டும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதும், தீச்சட்டி, தீர்த்தக்காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
உப்பு, மிளகு காணிக்கை :
நிலக்கோட்டை மாரியம்மனின் அருளால் பக்தர்களுக்கு ஏற்படும் நோய்கள் குணமடைகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நோய்களை தீர்த்து வைத்தால் உப்பு காணிக்கை செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். அதன்படி நோய் குணமானதும் அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் உப்பை காணிக்கையாக செலுத்துவார்கள்.
இதே போன்று உடலிலும், மனதளவிலும் ஏற்படும் இன்னல்களை போக்கினால் மிளகை காணிக்கை செலுத்துவதாகவும் பக்தர்கள் வேண்டிக்கொள்வார்கள். அதன்படி வேண்டுதல் நிறைவேறியதும் அம்மனுக்கு மிளகை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவார்கள். இந்த நடைமுறை தற்போது வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.