மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் மும்பை அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பத்தாவது தொடர் துவங்கி நடந்து வருகிறது. இதன் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்கும் 10வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் அணிகள் மோதின.
இதில் ’டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். ஐதராபாத் அணியில் பிபுல் சர்மாவுக்கு பதில் தமிழக வீரர் விஜய் சங்கர் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். இதே போல முஷ்பிகுர் ரஹீம் மீண்டும் அணிக்கு திரும்பினார்.
இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர்களான தவான் (48), வார்னர் (49) ஆகியோர் கைகொடுக்க, ஐதராபாத் அணி, 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய மும்பை அணிக்கு, துவக்க வீரர் பட்லர் (14) ஏமாற்றினார். பின் வந்த கேப்டன் ரோகித் சர்மா (4) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
பார்த்தீவ் படேல் (39) ஓரளவு கைகொடுத்தார்..
தொடர்ந்து எதிர்முனையில் ரானா அதிரடியாக ரன்கள் சேர்த்தார். போலார்டு (11) நிலைக்கவில்லை. பின் வந்த குர்னால் பாண்டியா (37) ஓரளவு கைகொடுத்தார். ரானா (45) புவனேஷ்வர் வேகத்தில் போல்டானார். பின் வந்த ஹர்திக் பாண்டியா போட்டியை முடித்து வைத்தார். இதையடுத்து மும்பை அணி, 18.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் தோல்வியடைந்த ஐதராபாத் அணி, இந்த ஆண்டுக்கான தொடரில் தனது முதல் தோல்வியை பதிவு செய்தது. தவிர வான்கடே தோல்வி ராசி தொடர்ந்து ஐதராபாத் அணியை தற்போதும் தொடர்கிறது.
இதுவரை நடந்துள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணி வெறும் 7 முறை மட்டுமே 150 ரன்கள் அல்லது அதற்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட தவறியுள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் 4 ஓவரில் 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய மும்பை வீரர் பும்ரா ஐபிஎல் அரங்கில் தனது இரண்டாவது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் களமிறங்கிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஆகியோர் மும்பை அணிக்காக 100 வது போட்டியில் பங்கேற்றனர். இப்பட்டியலில் அனுபவ ஹர்பஜன் சிங் (127 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தடரின் லீக் போட்டியில் மும்பை வீரர் பார்த்தீவ் படேல், 24 ரன்கள் தாண்டிய போது, ஐபிஎல் அரங்கில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் இம்மைல்கல்லை எட்டிய 26வது வீரர் என்ற பெருமை பெற்றார்.