சேலத்தில் ஒரு நகைக்கடையில் அமைக்கப்பட்ட புதிய ஷோரூம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று சேலம் வந்தார். பின்னர், அவர் ஷோரூம் முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது:-
சேலத்திற்கு முதல் முறையாக வந்துள்ளேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சேலம் ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும், ஆதரவுக்கும் எனது மனமார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களது அன்பை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. என்னை பார்க்க, வாழ்த்த வந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ‘பைரவா’ படத்தில் இளைய தளபதி விஜய் உடன் இணைந்து நடித்தேன். அவருடன் நடித்த அனுபவம் குறித்து நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
உங்களுக்கே தெரியும். அஜித்துடன் விரைவில் நடிப்பேன். சூர்யாவுடன் நடித்த ‘’தானாக சேர்ந்த கூட்டம்‘’ என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்து விஷாலுடன் ‘’சண்டக்கோழி-2” படத்தில் நடிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து ரசிகர்கள் ஆரவாரத்திற்கு இடையே ‘’ரஜினிமுருகன்” படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு அவர் நடனமாடினார். பின்னர் அவர், அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். நடிகை கீர்த்தி சுரேஷ் வருகையையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.