இலங்கை மின்சார சபையின் முப்பது தொழிற்சங்கங்கள் எதிர்வரும் மே தினத்துக்குப் பின் எந்நேரமும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடலாம் எனத் தெரியவருகின்றது.
நீண்டகாலமாக நிலவிவரும் தங்களது சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க அரசு முன்வராமை, மின்சார சபையில் தங்களுக்குப் பிடிக்காதவர்களை இஷ்டத்துக்கு இடமாற்றம் செய்தல், மேலதிக வேலைக்கான கொடுப்பனவை வழங்காமை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் பெரும்பாலான ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இழுபறியில் இருக்கும் அதேவேளை சபையின் பொறியியலாளர்களுக்கு மாத்திரம் 2015 ஜனவரி முதல் 70 தொடக்கம் 120 வீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய அவர், தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு உதாசீனம் செய்துவருவதாலேயே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பற்றி ஆராய உயர்மட்டக் குழுவொன்றைத் தான் நியமித்திருப்பதாகத் தெரிவித்தார்.