‘மீதொட்டமுல்ல’ அபாய வலயமாக பிரகடனம்! மேலும் அழிவுகள் ஏற்படும் என எச்சரிக்கை!!

கொலன்னாவை, மீதொட்டமுல்ல பகுதியில் குப்பை மலை அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசத்துக்கு அண்மித்த பகுதிகளை அபாயகரமான பகுதிகளாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் பிரகடனப்படுத்தியுள்ளது.

அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட வலயம் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலான பரிந்துரைகள் விரைவில் முன்வைக்கப்படும் என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்துள்ளார்.

குப்பை மலையில் நிலச்சரிவு ஏற்படவில்லை என்றும், குப்பை மலையின் பாரத்தை நிலம் தாங்கிக்கொள்ளாமையால், வீடுகள் இருந்த பக்கம், நிலம் இழுத்துச்செல்லப்பட்டு இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது எனவும் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிட்டுள்ளார்.

நிலம் இழுத்துச்செல்லப்பட்டதுடன், மண்சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய நிலைமையில், மேலும் குப்பைகளை கொட்டினால், நிலைமை மோசமடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அந்த பிரதேசத்தில் இருந்த சிறிய கான்கள் மூடப்பட்டுள்ளமையால், சிறியளவிலான, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மீதொட்டமுல்ல பகுதியில் மழை பெய்யுமாயின், வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதாகவும், அழிவுகள் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட வலயத்திற்குட்பட்ட சுமார் 130 வீடுகளைச் சேர்ந்த மக்கள் தற்காலிகமாக அப்புறப்படுத்தப்பட்டு, உறவினர்களின் வீடுகளிலும், தற்காலிக முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.